95) மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் (கி.பி.1883-1962) :

இந்திய வரலாறு கண்ட வீர பெண்மணிகளுள் இவரும் ஒருவர். சமூக சீர்திருத்தமான "தேவதாசி ஒழிப்பு" போராட்டத்தில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையாருடன் இணைந்து போராடி அந்த கேடுகெட்ட சமூக சீர்கேட்டை ஒழிக்க பாடுபட்டவர். இந்தி எதிர்ப்புப் போராட்ட களத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். பெரியாருடன் காங்கிரஸை விட்டு வெளியேறியவர் அவருடன் இணைந்து தி.க. கட்சியில் இணைந்து போராடியவர் பின்னர் அண்ணா தொடங்கிய தி.மு.க கட்சியில் இணைந்து தன் வாழ்நாள் கடைசி வரை அந்த கட்சியிலையே இருந்தார்.

இவர் கி.பி.1883ல் திருவாரூருக்கு அடுத்துள்ள மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூரில் கிருஷ்ணசாமி-சின்னம்மாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். ஆதலால் அவரது கிராம பெயரே இவரின் பெயரோடு ஒட்டிக்கொண்டது. இவரது தந்தை தேவதாசி முறையை எதிர்த்ததால் அவருக்கு எழுந்த பலத்த எதிர்ப்புகளால் அவர் காணாமல் போனார். அதனால் வறுமையில் வாடிய இவரது தாயார் இவரை 10 ரூபாய் மற்றும் பழைய சேலைகளுக்கு இவரை இளமையிலையே விற்றார். வளர்ந்தவுடன் இவரை வேட்டையாட காத்திருந்த 80வயது கிழவரை எதிர்த்து போராடி தனக்கு இசையும் நடனமும் கற்று தந்த ஆசானான பேரளம் சுயம்பு பிள்ளை என்பவரை மணந்தார். அம்மையாரின் போராட்டங்களுக்கு இவரது கணவர் ஆதரவாக உறுதுணையாக இருந்தார். கணவரின் துணையோடு கி.பி.1917ல் தேவதாசி ஒழிப்பு போராட்ட களத்தில் இறங்கினார். ஆனாலும் கொழுத்த பணக்காரர்கள் இவரது சுயசாதியை சேர்ந்தவர்களால் மேடையிலையே தலைமுடியை அறுத்து அவமானப்படுத்தப்பட்டார். ஆனாலும் கலங்காது தனது போராட்டங்களை தொடர்ந்து நடத்தினார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். இவர் நாட்டுப்பற்று மட்டுமல்ல சமூகத்தின் சீர்கேட்டை மாற்ற வேண்டும் என்ற எண்ணமுடையவராக இருந்ததால் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். நாட்டுப்பற்று மேடைகளில் யாரும் பேசக்கூடாது என்று ஆங்கிலேயர்கள் சட்டம் போட்டபோது பேசத்தானே கூடாது என்று பேச வேண்டியதை கரும்பலகையில் எழுதி வைத்து கூட்டம் போட்டவர் இவர். இரண்டாம் வட்டமேசை மாநாட்டின் தோல்விக்கு பின்னர் இந்தியா திரும்பிய காந்தியை ஆங்கில அரசு கைது செய்ததை எதிர்த்து மூவர்ண கொடியை தனது ஆடையாக அணிந்து எதிர்ப்பு தெரிவித்தவர். கி.பி.1925ல் பெரியார் காந்தியுடன் ஏற்பட்ட பிணக்கினால் காங்கிரஸில் இருந்து வெளியேறியவுடன் இவரும் காங்கிரஸில் இருந்து வெளியேறி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். இந்த சுயமரியாதை இயக்கமே பின்னாட்களில் தொடங்கப்பட்ட தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு ஆரம்பமாக பிராமண எதிர்ப்புணர்வுடன் இயங்கி வந்தது.  தேவதாசி முறை என்ற சமூக சீர்கேட்டை அகற்ற பாடுபட்ட டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் தீர்மானத்தை ஆதரித்தார். ஆனாலும் இந்த தீர்மானம் ஆரம்பத்தில் கி.பி.1930ல் தோல்வியை தழுவியது. இந்த நேரத்தில் சட்டமன்றத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் அதை தீர்மானமாக நிறைவேற்ற பாடுபட்ட போது மூதறிஞர் ராஜாஜி "தேவதாசி முறை ஒழிப்பு சமூக சீர்கேட்டை கொண்டு வரும். இந்திய கலாச்சாரமே கெட்டு விடும்" என்று கூற அதற்கு டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி "இந்திய கலாச்சாரத்தை இவ்வளவு காலம் காப்பாற்றிய எங்கள்  சமூகத்திற்கு பதிலாக இனி உங்கள் வீட்டு பெண்கள் இந்திய கலாச்சாரத்தை காப்பாற்ற தேவதாசி பெண்களாகட்டும். அதற்கு ஆட்சேபனை இல்லை " என்ற பதில் கொடுத்தது அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. அவருக்கு அவ்வாறு பேச சொல்லி அனுப்பியது மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரே. இவர் கி.பி.1936ல் "தாசிகளின் வஞ்சக வலை அல்லது மதி பெட்ர மைனர்" என்ற நூலை எழுதினார். இது சமூகத்தில் அதிர்வலைகளை எழுப்பியது. கி.பி.1937-40 வரையிலான கட்டாய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு 6 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்தார்.‌ தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்ட இவரின் கனவு கி.பி.1947ல் சென்னை சட்டமன்றத்தில் சட்டமாக மாறியது.  பின்னர் பெரியாருடன் அண்ணா முரண்பட்டு "திராவிடர் முன்னேற்ற கழகம் ' கட்சியை ஆரம்பித்த போது இவரும் தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் இவரது மரணம் வரை தி.மு.க. கட்சியிலையே தொடர்ந்தார். இவர் ஜூன் 27, 1962ல் மயிலாடுதுறையில் காலமானார். தமிழக அரசு சார்பாக கி.பி.1989ல் முதலமைச்சர் டாக்டர்.மு.கருணாநிதி அவர்களால் இவரது பெயரில் "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்" என்ற பெயரில் சமூகத்தில் ஏழை பெண்களின் திருமணத்திற்கான உதவி திட்டம் அறிவிக்கப்பட்டு இன்றும் அது நடைமுறையில் தொடர்ந்து சிறப்புற செயல்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்