96) டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி (கி.பி.1886- 1968) :
வரலாறு கண்ட புரட்சி பெண்களில் இவரும் ஒருவர். தமிழ்நாட்டில் தேவதாசி முறை என்ற கேடுகெட்ட சமூக சீர்கேட்டை ஒழிக்க பாடுபட்டவர். மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருடன் இணைந்து பாடுபட்டார். பெண்கள் படிப்பதற்கே தடை இருந்த காலத்தில் தன் தாய் உடல்நல குறைவால் மரணமடைந்ததை கண்டு தான் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று உறுதியுடன் மருத்துவராகி உடல்நல சீர்கேடு மட்டுமல்லாது சமூக சீர்கேட்டை விரட்டவும் பாடுபட்டவர். சென்னை மாநகரின் முதல் பெண் துணை மேயர் என்ற பொறுப்பை ஏற்றவர். புற்றுநோய் மருத்துவத்திற்காக சென்னையில் "அடையாறு புற்றுநோய் மருத்துவமனை"யை நிதியுதவியுடன் ஆரம்பித்து இன்று வரை அது மக்களின் ஆரோக்கியத்திற்காக பாடுபடுவதற்கு ஆரம்ப விதையை விதைத்தவர் இவரே.
இவர் கி.பி.1886 ஜூலை 30ல் புதுக்கோட்டையில் தஞ்சையின் மகாராஜா கல்லூரி முதல்வராக இருந்த நாராயணசாமி ஐயர் மற்றும் சந்திரம்மாள் என்பவருக்கு மகளாக பிறந்தார். இவரது தாயாரான சந்திரம்மாள் தேவதாசி குலத்தை சேர்ந்தவர் என்பதால் குடும்பத்தை எதிர்த்து இவரது தந்தை அவரை திருமணம் செய்து கொண்டதால் தந்தையின் குடும்பத்தினருடன் எந்தவித தொடர்புகளும் இல்லை. தாயாரின் குடும்பத்தினருடன் தொடர்புகள் இருந்ததால் பின்னாட்களில் தேவதாசி முறையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த அதுவே இவருக்கு பின்னாட்களில் தூண்டுதலாக இருந்தது. அந்நாட்களில் பெண்கள் கல்வி பயிலுவது சிரமமாக இருந்தது. ஆனாலும் இவரது தந்தை இவரை கல்வி பயில பள்ளிக்கு அனுப்பினார். பாடங்களில் நல்ல ஆர்வமும் தேர்ச்சியும் உடையவராக விளங்கினார். படிப்பு முடிந்தவுடன் புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். கல்லூரியின் முதல்வர் இவரது விண்ணப்பத்தை ஆண்கள் பயிலும் கல்லூரி என்பதால் நிராகரித்து அனுப்ப மனம் தளராமல் இவரது தந்தையின் மூலமாக புதுக்கோட்டை மன்னர் இவரை கல்லூரியில் படிக்க அனுமதித்தார். உதவி தொகையும் வழங்கி ஊக்குவித்தார். இவரது தாயார் இவருக்கு தகுந்த மணமகனை தேடி திருமணம் முடிக்க விரும்பினார். ஆனாலும் இவர் கல்லூரி படிப்பை முடித்ததும் சென்னை மருத்துவ கல்லூரியில் கி.பி.1907ல் இணைந்து கி.பி.1912ல் தமிழகத்தின் முதல் பெண் மருத்துவராக ஆனார். கல்லூரியில் படிக்கும் போது உடன் படித்த சுந்தர ரெட்டி என்ற மருத்துவரை காதல் மணம் புரிந்து கி.பி.1914ல் கைப்பிடித்தார். இவரது சகோதரரான ராமசாமி என்பவரின் மகன் தான் தமிழ் சினிமா உலகின் பிரபலமான காதல் மன்னன் என்றழைக்கப்பட்ட ஜெமினி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் உயர் படிப்பிற்காக வெளிநாடு சென்று படித்தார். கல்லூரி காலத்தில் சரோஜினி நாயுடுவை சந்தித்தார். அவரின் தொடர்பால் பெண்கள் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான உரையாடல்களை தொடர்ந்தார். இதன் மூலம் இவருக்கு அன்னிபெசண்ட் அம்மையார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த காந்தியடிகளுடன் நல்ல நட்பையும் பெற்றார். பெண்களின் பிரச்சினைகளுக்காகவும் அவர்களின் கல்வி மற்றும் உரிமைக்காகவும் குரல் கொடுத்தார். கி.பி.1926ல் இந்தியாவிலையே முதல் பெண்மணியாக சட்டமன்றத்திற்கு மேலவையில் தேர்தெடுக்கப்பட்டதும் மட்டுமின்றி சட்ட மேலவை துணை தலைவராகவும் இருந்தார். இந்த நேரத்தில் தான் தேவதாசி முறையை எதிர்த்து சட்டம் இயற்ற வேண்டுமென்று போராடினார். இந்த விவாதத்தில் தான் எதிர்த்து நின்ற காங்கிரஸ் தலைவரை மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் யோசனைப்படி "நாட்டின் கலாச்சாரத்தை இதுவரை எங்கள் குடும்பத்து பெண்கள் காத்தது போதும். இனி உங்கள் குடும்பத்து பெண்கள் நாட்டின் கலாச்சாரத்தை காக்கட்டும்" என்று எதிர்வினை உரைத்து சட்டமன்றத்தையே அதிர வைத்தார். பின்னாட்களில் கி.பி.1947ல் தேவதாசி ஒழிப்பு முறை சட்டமாகியது.
விபச்சார விடுதியின் பெண்களின் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற அநாதை குழந்தைகளுக்காக "அவ்வை இல்லம்" ஒன்றை துவக்கினார். அவரின் சேவையை "சட்டமன்ற உறுப்பினராக எனது அனுபவம்" என்ற நூல் கூறுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக சிறப்பு மருத்துவமனை அமைக்க தீர்மானம் இயற்றினார். ஓவ்வொரு நகராட்சி பள்ளி மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் உடல்நலத்தை ஆய்வு செய்ய மருத்துவ பரிசோதனையை பரிந்துரைத்தார். இவரின் கோரிக்கையை ஏற்று அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவை துவங்கியது. திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனை இவரது சீரிய முயற்சிகளால் தான் ஆரம்பிக்கப்பட்டது. இவரது முயற்சியால் தான் முஸ்லீம் பெண்களுக்கு விடுதிகள் துவக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு நிதியுதவியை பரிந்துரைத்தார். சமூக நல வாரியத்தின் முதல் தலைவரானார். இவரது முயற்சியால் தான் கி.பி.1952ல் ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு கி.பி.1954ல் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை துவக்கப்பட்டது. இன்று வரை புற்றுநோய் சிகிச்சையில் தன்னிகரற்ற மருத்துவமனையாக இந்திய அளவில் சிறப்புற விளங்குவதற்கு இவரே காரணமாகும். பெண் கல்விக்கு தனது கடைசி காலம் வரை போராடினார். கி.பி.1956ல் இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இவர் ஜூலை 22, 1968ல் சென்னையில் தனது 82வது வயதில் காலமானார். தமிழக அரசு இவரின் பெயரில் "டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு திட்டம்" என்பதை அறிவித்து ஏழை எளிய பெண்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி வருகிறது.

Comments
Post a Comment