141) சகுந்தலா தேவி
சகுந்தலா தேவி (கி.பி.1929-2013) :
இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பெண்மணிகளுள் கணித மேதை சகுந்தலா தேவியும் ஒருவர். பக்தியாலும், தேசத்திற்காக பாடுபட்ட வீரப்பெண்மணிகளுக்கு மத்தியில் தனது அறிவுதிறனுக்காக பாராட்டப்பட்ட பெண்மணி. கால்குலேட்டர் மற்றும் கம்யூட்டரையும் மிஞ்சிய வேகத்தில் கணித புதிர்களை விடுவித்த கணித மேதைகளுள் ஒருவர்.
இவர் கி.பி.1929 நவம்பர் 4ம் தேதி பெங்களூரில் ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையான சுந்தரராஜ ராவ் பூசாரியாக இருந்தாலும் சர்க்கஸ் சாகசங்கள் மீது ஈடுபாடு கொண்டவர். சிங்கத்தின் வாயில் தலையை விடுவது, மேஜிக் நிகழ்ச்சிகள் மற்றும் சீட்டுகட்டுகளில் எண் வித்தை செய்வது அவருக்கு பிடிக்கும். ஆனால் இவருக்கு தந்தையிடம் இருந்து எண் கணிதம் மிகவும் ஈர்ப்பாயிற்று. இவரின் 3 வயதில் தந்தையுடன் சீட்டுகட்டு வித்தை விளையாட்டில் ஈடுபட்டார். அப்போது இவரது தந்தைக்கு இவரின் கணித திறமை புலனாயிற்று. இதனால் தனது சர்க்கஸ் தொழிலை விட்டுவிட்டு மகளை அழைத்துக் கொண்டு பெங்களூரில் சாலைகளில் சீட்டுகட்டு வித்தை விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியதில் பெங்களூர் முழுவதும் பிரபலமாயினார். மைசூர் பல்கலைக்கழகத்தில் நடந்த கணித திறமையை வெளிப்படுத்திய நிகழ்வில் கலந்து கொண்டபோது இவருக்கு வயது வெறும் 6 மட்டுமே. பின்னர் தனது 14 வயதில் கி.பி.1944ல் லண்டன் சென்றார். சகுந்தலா தேவி உலகெங்கும் பல நாடுகளுக்கு சென்று தனது கணித திறமையை வெளிப்படுத்தினார். கி.பி.1950ம் ஆண்டு முழுவதுமே ஐரோப்பா முழுவதும் சென்றார். பின்னர் கி.பி.1960களில் இந்தியா திரும்பியவர் இந்திய நிர்வாக சேவையின் அதிகாரியாக இருந்த கல்கத்தாவை சேர்ந்த பரிதோஷ் பானர்ஜியை மணந்தார். இருவரும் கி.பி.1979ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். தம்பதிகளுக்கு அனுபமா பானர்ஜி என்ற ஒரு மகள் உண்டு. இதற்கிடையில் கி.பி.1980ல் இந்திரா காந்தியை எதிர்த்து தெலுங்கானாவில் மேடக் தொகுதியிலும் மும்பை தெற்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்றார்.
கி.பி.1976ல் நியூயார்க் நகருக்கு சென்றார். கி.பி.1977ல் தெற்கு மெத்தடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் 201ன் 23 மூலத்திற்கான விடையை வெறும் 50 வினாடிகளில் அளித்தார். கம்ப்யூட்டரை விட வேகமாக பதில் அளித்தார். கி.பி.1980ல் இலண்டன் இம்பிரியல் கல்லூரியில் இரண்டு 13 இலக்க எண்களை பெருக்கி வரும் விடையை 28 வினாடிகளில் விடையளித்தது கின்னஸ் சாதனை விவரத்தில் பதிவாகியது. கி.பி.1988ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்வி உளவியல் போராசிரியரான ஆர்தர் ஜென்சன் இவரது கணித திறமையை சோதித்தார். பின்னர் தனது கண்டுபிடிப்புகளை Intelligence என்ற பெயரில் வெளியிட்டு இவரை பெருமைப்படுத்தினார். கி.பி.1980களின் நடுப்பகுதியில் பெங்களூர் திரும்பினார். இந்த காலகட்டத்தில் தான் ஜோதிடம், சமையல் உட்பட பல நாவல்களை எழுதினார். மர்ம நாவல்கள் மற்றும் சஸ்பென்ஸ் நாவல்களை எழுதினார். இசையில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டிருந்தார்.
உங்களுக்கான ஜோதிடம், புக் ஆஃப் நம்பர்ஸ், இன் தி வொண்டர்லேண்ட் ஆஃப் நம்பர்ஸ், உங்கள் குழந்தையில் கணித மேதையை எழுப்புங்கள், சூப்பர் மெமரி இது உங்களுடையதாக இருக்கலாம், தி வேர்ல்ட் ஆஃப் ஹோமோசெக்சாவல்ஸ் ஆகிய நூல்களை எழுதினார். ஏப்ரல் 2013ல் சுவாச கோளாறுக்காக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதயம் மற்றும் சிறுநீரக சிக்கல்களும் இருந்ததால் ஏப்ரல் 21, 2013ல் தனது 83வது வயதில் பெங்களூரில் காலமானார். 2013 நவம்பர் 4ம் தேதி கூகுள் டூடுலில் இவரது பிறந்தநாள் கெளரவிக்கப்பட்டது.
கி.பி.2020 ஜூலை 31ல் வித்யா பாலன் நடிப்பில் சகுந்தலா தேவி என்று இவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக அமேசான் பிரைம் ஒடிடி செயலியில் வெளியாகியது.



Comments
Post a Comment