142) கொர்னேலியா சொராப்ஜி
கொர்னேலியா சொராப்ஜி (கி.பி.1866-1954) :
இந்தியாவில் ஆணுக்கு இருந்த தொழில் உரிமைகள் பெண்களுக்கு மறுக்கப்பட்டு இருந்த காலகட்டத்தில் 19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ம் நூற்றாண்டு மத்திய பகுதி வரை ஆணுக்கு இணையானவர்கள் பெண்கள் என்றும் அவர்களுக்கு இணையாக படித்து பட்டம் பெற்று 19ம் நூற்றாண்டின் இறுதியிலையே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்று வழக்கறிஞர் பட்டம் பெற்று ஆனால் பெண்களுக்கு வழக்கறிஞர் தொழில் நடத்த அனுமதிக்காக போராடியவர். சமூக நீதி மற்றும் பெண்ணுரிமைக்காகவும் குரல் கொடுத்தவர் இவர்.
இவர் கி.பி.1866 நவம்பர் 15ல் நாசிக் நகரில் பினான்சினா மற்றும் ஃபோர்டு சொரப்ஜி ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு சூசி சொரப்ஜி, ஆலிஸ் சொரப்ஜி என்று இரு சகோதரிகளுடன் 10 குழந்தைகளில் ஒருவராக பிறந்தார். ஆனால் இவருடன் 5 சகோதரிகள் மற்றும் 1 சகோதரர் என 7 பேர் மட்டுமே உயிர் பிழைத்து இருந்தனர். இவரது தாய் தென்னிந்தியாவை சேர்ந்தவர். இந்து மதத்திலிருந்து சிறு வயதிலையே கத்தோலிக்கராக ஆனவர். தந்தை ஜொராஷ்டிரியத்திலிருந்து (பார்சி) மதம் மாறிய கிறிஸ்தவர். இவரது தாய் பெண்கள் கல்வி கற்பதன் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்திய கல்வியாளர். இவரது ஆரம்பகால வாழ்க்கை பூனே மற்றும் பெல்காமில் கழிந்தது. தனது கல்வியை வீட்டிலும் மிஷனரி பள்ளிகளிலும் படித்து தேர்ந்தார். இவரது தாய் இவரை உயர்கல்வி கற்பதன் அவசியத்தை உணர்த்தவே பூனேவில் உள்ள டெக்கான் கல்லூரியில் பட்டப்படிப்பில் முதல் பெண் மாணவராக சேர்ந்து கல்லூரி படிப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். ஆனாலும் பெண் என்பதால் இங்கிலாந்து சென்று படிக்க கல்வி உதவித்தொகை இவருக்கு கிடைக்காத காரணத்தால் ஆண்களுக்கான கல்வி நிறுவனமான அகமதாபாத்திலுள்ள குஜராத் கல்லூரியில் தற்காலிகமாக வேலைக்கு சேர்ந்தார். இவரே பம்பாய் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. தனது உயர்படிப்பிற்காக கி.பி.1888ல் தேசிய இந்திய சங்கத்திற்கு கடிதம் எழுதினார். கி.பி.1889ல் இவருக்கு மோரிஹோப்ஹவுஸ் மற்றும் அடிலெய்ட் மானிங் ஆகியோர் இவருக்கு நிதியுதவி அளித்தனர். இவர்களின் உதவியினால் சிறப்பு அனுமதி பெற்று ஆக்ஸ்போர்டில் உள்ள சோமர்வில் கல்லூரியில் இவருக்கு அனுமதி கிடைத்தது. அங்கேயே சிவில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை முடித்தார்.
கி.பி.1894ல் இந்தியா திரும்பியதும் பர்தா பெண்களின் சமூகத்தில் அவர்களுக்கான சொத்துகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்தூர் மற்றும் கத்தியவார் (செளராஷ்டிரா) சமஸ்தானங்களின் பிரிட்டிஷ் ஏஜெண்ட்டுகள் முன்பு மனுக்களை தாக்கல் செய்தார். அவர் பெண்ணாகவும் வக்கீலாக பதிவு பண்ணாத காரணத்தால் நீதிமன்றத்தில் வாதிட முடியாத கி.பி.1897ல் பம்பாய் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படிப்பையும் வக்கீல் தேர்வுக்கும் எழுதினார். கி.பி.1899ல் அலகாபாத் நீதிமன்றத்தில் இந்தியாவின் முதல் பெண் வக்கீலாக இருந்தார். ஆனாலும் பெண்களை வக்கீல் பயிற்சிக்கும் தடை செய்யும் சட்டம் இருந்ததால் அவரால் பிராக்டிஸ் செய்ய முடியவில்லை. கி.பி.1923ல் ஒருவழியாக இந்த சட்டம் தடை நீக்கப்பட்ட பின்னர் வக்கீல் தொழிலுக்கு அனுமதி கிடைத்தது. கி.பி.1902ல் மாகாண நீதிமன்றங்களில் இந்திய பெண்கள் மற்றும் சிறார்கள் பிரதிநிதப்படுத்த பெண் சட்ட ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்று இந்திய அலுவலகத்திற்கு மனு கொடுத்தார். கி.பி.1904ல் வங்காள நீதிமன்றங்களுக்கு பெண் உதவியாளராக நியமிக்கப்பட்டார். கி.பி.1907ல் இருந்து வங்காளம், பீகார், ஓரிஸா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் நீதிமன்றத்தில் பெண் உதவியாளராக பணிபுரிந்தார். இந்த நேரத்தில் 600க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் அநாதைகளின் சட்ட போராட்டங்களில் உதவி புரிந்தார். கி.பி.1924ல் பெண்களுக்கு சட்ட தொழில் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டதால் இவர் கல்கத்தாவில் பயிற்சி செய்ய தொடங்கினாலும் ஆண்/பெண் பாகுபாடு காரணத்தால் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தாமல் வழக்கு பற்றிய கருத்துகளை தயாரிக்க அளவிலையே மட்டுபடுத்தப்பட்டார். கி.பி.1929ல் சொராப்ஜி உயர்நீதிமன்றத்தில் இருந்து ஒய்வு பெற்று இலண்டனில் குடியேறினாலும் குளிர்காலத்தில் இந்தியாவுக்கு வந்து தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இவர் பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். பர்தாவுக்கு அப்பால் காதல் மற்றும் வாழ்க்கை (1901), Sun -babies (1904), பிட்வின் தி டிவிலைட்ஸ் (1908), ஆண்கள்,பெண்கள் மற்றும் பறவைகள் (1916), தி பர்தாஷியன் (1917), சன் பேபீஸ் ஸ்டடீஸ் இன் கலர்ஸ் (1918), சுபாலா-குழந்தை தாய் (1920) மற்றும் இந்தியா காலிங்: தி மெமரீஸ் ஆஃப் கொர்னேலியா சொரப்ஜி(1934), இந்தியா ரீகால்ட் (1936) என்ற இரு சுயசரிதைகளையும் எழுதினார். இவர் கி.பி.1954ல் ஜூலை 6ல் இலண்டனில் தனது 86வது வயதில் மறைந்தார். கி.பி.2012ல் இலண்டனில் உள்ள லிங்கன் விடுதியில் இவரது மார்பளவு சிலை நிறுவப்பட்டது. கி.பி.2017ல் இவரது 151வது பிறந்த நாளின் போது கூகுள் டூடூல் இவரை பெருமைப்படுத்தியது. வாழ்நாள் முழுவதும் பெண்ணியவாதியாக சட்ட போராட்டங்களை நடத்தியதோடு அவர்களின் உரிமைகளுக்காக போராடினார்.



Comments
Post a Comment