144) கமலா சோஹோனி
கமலா சோஹோனி (கி.பி.1912-1998) :
இந்திய சரித்திரத்தில் தடைகளை உடைத்தெறிந்து சாதனை புரிந்த பெண்மணிகள் பலர் உண்டு. அதில் இருவரும் ஒருவர். இந்திய சுதந்திரத்திற்கு முன்பு அறிவியலில் டாக்டர் பட்டம் பெற ஆண்கள் மட்டுமே இருந்த நிலையில் அதை உடைத்தெறிந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி இவர்.
இவர் கி.பி.1912 ஜூன் 8ம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நாராயண் ராவ் பகவத் என்பவருக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தையும் அவரின் சகோதரரான மாதவ் ராவ் பகவத் ஆகிய இருவருமே வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள். அதனால் இவருக்கும் அறிவியல் ஆர்வம் தொற்றிக்கொள்ள பம்பாய் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் (இயற்பியல்+வேதியியல்) இளங்கலையில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். பின்னர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுகலை மாணவராக சேர முயற்சித்தார். அந்த நேரத்தில் முதுகலையில் எந்த பெண்களும் இதுவரை சேர்ந்து படிக்கவில்லை என்ற காரணத்தால் அதன் இயக்குனரான விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் இவருக்கு அனுமதி அளிக்க மறுத்தார். மகாத்மா காந்தியை வழிகாட்டியாக கொண்ட இவர் சத்தியாகிரக முறையில் போராடி பின்னர் சர்.சி.வி.இராமனுடன் வாதாடி கல்லூரியில் சேர அனுமதி பெற்றார். அனுமதிக்கு சர்.சி.வி. இராமன் 1) வழக்கமான (Regular) மாணவராக இல்லாமல் வெளி மாணவராக படிக்கலாம் 2) வழிகாட்டியின் அறிவுரைப்படி இரவில் ஆய்வு பணிகளை செய்யவேண்டும் 3) ஆய்வுக்கூடத்தில் நிலவும் சூழலை கெடுத்து விடக்கூடாது என்ற நிபந்தனைகளை விதித்து அதை இவர் ஏற்றுக்கொண்ட பின்பே கல்லூரியில் இணைய அனுமதி கிடைத்தது. பாலின பாகுபாடு காரணமாக நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சர்.சி.வி.இராமனின் சிந்தனை இவரை பாதித்தது. ஆனாலும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு தனது ஆய்வினையும் படிப்பையும் முடித்த இவரால் தான் அதே சர்.சி.வி.இராமன் பெண்களும் இந்திய அறிவியல் கழகத்தில் இணையலாம் என்ற அறிவிப்பு வெளியிட காரணமாயிற்று. பின்னர் போராசிரியர் சீனிவாசையா வழிகாட்டுதலின் படி ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இந்திய மக்களின் ஊட்டசத்துகளில் தனது ஆய்வை எடுக்க முடிவு செய்தார். அதன்படி பால் மற்றும் பருப்பு பொருட்களில் உள்ள புரதங்களை பற்றி ஆய்வு செய்தார். அந்த நேரத்தில் உலகில் பருப்புகளில் உள்ள புரதத்தை பற்றி ஆய்வு செய்தவர் இவர் ஒருவரே. வெற்றிகரமாக ஆய்வை முடிவு செய்து கி.பி.1936ல் பம்பாய் பல்கலைக்கழகத்தில் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை கிடைக்க அங்கே சென்று உருளைக்கிழங்கில் ஆய்வை தொடர்ந்தார். அப்போது தான் தாவரங்களின் எல்லா திசுககளிலும் உள்ள செல்களில் என்டோகுரோம் சி என்ற என்சைம் இருப்பதையும் அவை தாவரங்களின் ஆக்ஸிகரணத்தில் முக்கிய பங்கு வகிப்பதையும் கண்டுபிடித்தார். தனது ஆய்வை 16 மாதங்களில் முடித்து 40 பக்க அளவிலையே ஆய்வுகட்டுரையை சமர்ப்பித்து கேம்பிரிட்ஜில் பி.ஹெச்.டி (அறிவியல் முனைவர்) டாக்டர் பட்டம் பெற்றார். குறைந்த காலத்தில் அதுவும் குறைந்த பக்கங்களிலையே ஆய்வுகட்டுரையை சமர்பித்து முனைவர் பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே.
கி.பி.1939ல் இந்தியா திரும்பிய இவர் புதுடில்லியில் உள்ள லேடி ஹார்டிங் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்ட உயிர் வேதியியல் துறைக்கு தலைவராக ஆனார். பின்னர் குன்னூரில் உள்ள ஊட்டச்சத்து ஆய்வகத்தில் உதவி இயக்குனரானார். கி.பி.1947ல் இவரது திருமணத்தின் பொருட்டு பம்பாய்க்கு இடம் பெயர்ந்தார். புள்ளியியல் துறை நிபுணரான எம்.வி.சோஹோனியை திருமணம் செய்து கொண்டார். அங்கு அறிவியல் கழகத்தில் (Institute of Science) துறை தலைவராக ஆனார். பின்னர் அந்த கழகத்தில் உதவி இயக்குனரானார். இவரது ஆய்வுகள் எல்லாம் மக்களுக்கு உதவும் வகையிலையே இருந்தது. அன்றைய ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் அறிவுறுத்தலின் பேரில் பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பதநீர் பானத்தில் உள்ள ஊட்டசத்துகளை பற்றி ஆய்வு நடத்தினார். பழங்குடி மக்களின் வாழ்வியலோடு கலந்த உணவில் உள்ள ஊட்டசத்துகளை பற்றிய ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார். நீரா பானத்தின் உள்ள ஊட்டசத்துகள் பற்றிய இவரது ஆய்வு அனைவரையும் கவர்ந்தது. இதனால் இவருக்கு "இராஷ்டிரபதி" விருது வழங்கப்பட்டது. கி.பி.1966ல் எட்டு பெண்களுடன் இந்திய நுகர்வோர் வழிகாட்டு சபையை (Consumer Guidance society of India) ஆரம்பித்தார். பின்னர் அதன் வழியாக உற்பத்தி பொருட்களின் கி.பி.1977ல் தரக்கட்டுப்பாட்டு சோதனைகளை நடத்தினார். இந்த நிறுவனத்தின் சார்பாக கீமத் என்ற இதழையும் ஆரம்பித்தனர். கி.பி.1982ல் அந்த நிறுவனத்தின் தலைமை இய்ககுனரானார். கமலா அவர்கள் மாணவர்களுக்காக நிறைய அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அது மட்டுமல்லாது நுகர்வோர் நலன் பற்றிய கட்டுரைகளையும் கீமத் இதழில் நிறைய எழுதினார். கி.பி.1998ல் ஜூன் 28ல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) புதுடில்லியில் ஏற்பாடு செய்த விழாவின் போது மேடையிலையே மயங்கி விழந்து தனது 86வது வயதில் காலமானார். வாழ்நாள் முழுவதும் மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த இவர் அதே மருத்துவ ஆராய்ச்சி கூட்டத்திலையே தனது இன்னுயிரை இழந்தார்.


Comments
Post a Comment