147) ருக்மணி லட்சுமிபதி
ருக்மணி லட்சுமிபதி (கி.பி.1892-1951):
இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்த பெண்களுக்கு மத்தியில் இவரும் ஒருவர். இவர் இந்திய சுதந்திர போராட்ட களத்தில் தீவிரமாக பங்கு கொண்டது மட்டுமல்லாது சென்னை மாகாணத்தின் முதல் பெண் கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கி.பி.1892 டிசம்பர் 6ல் ஒரு விவசாய குடும்பத்தில் சீனிவாசராவ்-சூடாமணி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவரது தாத்தா ராஜா டி.ராம்ராவ் ஜமீன்தாராக இருந்தார். அந்த காலத்தில் பால்ய விவாகம் நடைபெற்று வந்ததால் இவரது தந்தையும் இவருக்கு பால்ய விவாகத்திற்கு மணமகனை தேடினார். அந்த நேரத்தில் வீரேசலிங்கம் பந்தலு என்ற சுதந்திர போராட்ட வீரர் இவரின் தந்தையிடம் பால்ய விவாகத்தின் மூலம் ஏற்படும் தீமைகளை எடுத்து கூறி அந்த முடிவினை கைவிட வைத்தார். அவர் தனது மருமகள் ராஜாமணி என்பவருடன் இவரையும் பள்ளிக்கு கல்வி பயில தந்தையிடம் அறிவுரை கூறி பள்ளிக்கு அனுப்பினார். இந்த வீரேசலிங்கம் பந்தலு அவர்களின் அறிவுரையினால் இவர் பிற்காலத்தில் சுதந்திர போராட்ட களங்களில் பங்கு பெற்றார். பள்ளி படிப்பு முடிந்ததும் இவருக்கு உடல்நலம் சரியில்லாத போது கவனித்து கொண்ட மருத்துவரான டாக்டர்.அச்சந்தா லக்ஷ்மிபதியுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. அவர் முதல் மனைவியை இழந்தவர் மட்டுமல்லாது 3 குழந்தைகளின் தந்தையும் கூட. எல்லோரின் எதிர்ப்பையும் மீறி கி.பி.1911ல் இவர்களது காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களின் காதல் திருமணம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதுடன் தெலுங்கு கவிஞர்கள் இதை பற்றி கவிதைகள் எழுதினர். அதுமட்டுமல்லாது ஒரு கவிஞர் "ருக்மிணி சுயம்வரம்" என்ற நவீன நாடகத்தை வேறு இயற்றினார். திருமணம் நடைபெற்றதும் மனைவியின் விருப்பப்படி அவரை சென்னை கிக்றிஸ்தவ கல்லூரிக்கு படிக்க அனுப்பினார். அங்கு பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் இவரின் ஆசைப்படி சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படிக்க ஆரம்பித்தார். ஆனாலும் இவருக்கு முதல் குழந்தை இந்திரா பிறந்ததால் மருத்துவ படிப்பை பாதியிலையே நிறுத்தினார். இந்த நேரத்தில் இவரும் இவரின் கணவரும் காந்தியடிகளின் அகிம்சையினால் ஈர்க்கப்பட்டு அவர் வழியே சுதந்திர போராட்ட களத்தில் இறங்கினர். இவரது மகளான இந்திரா பின்னாளில் பிரபல நரம்பியல் மருத்துவர் டாக்டர்.இராம மூர்த்தியை மணந்தார்.
சமூக சேவைகளில் நாட்டம் கொண்டு மார்க்கெட், ராதா பாய், கமலாபாய் சட்டோபாத்யா ஆகியோருடன் இணைந்து உருவாக்கிய "பாரத் மகிளா மகா மண்டல்" அமைப்பின் சென்னை கிளையின் செயலாளராக பணியாற்றினார். சாதி மத வேறுபாடுகளை களைந்து பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். இஸ்லாமிய பெண்களின் சமூக முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். குடிகார கணவர்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டு பொறுக்க முடியாமல் மதுவிலக்கு பிரச்சாரங்களிலும் அது தொடர்பான போராட்டங்களில் பங்கு கொண்டார். தேவதாசி முறையை ஒழிக்க முத்துலெட்சுமி அம்மையாருடன் இணைந்து பாடுபட்டார். குழந்தை திருமணத்தை எதிர்த்து அதை ஒழிக்க வேண்டும் என்பதோடு பெண்களின் திருமண வயதை உயர்த்தவேண்டும் என்று போராடினார். கி.பி.1926ல் பாரீஸில் நடைபெற்ற அனைத்துலக வாக்குரிமை பெண்களின் சங்கத்தின் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு உரையாற்றினார். காந்தியடிகளின் கதர் பிரச்சாரங்களில் கலந்து கொண்டார். இவரும் இவரது கணவர் குழந்தைகளும் கதராடையையே அணிய ஆரம்பித்தனர். திருவல்லிக்கேணியில் கதர் விற்பனை நிலையம் ஒன்றை ஆரம்பித்து நடத்தினார்.
இவர் கி.பி.1929ல் சைமன் கமிஷன் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கறுப்பு கொடி காண்பித்தார். மேலும் லாகூர் காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டார். கி.பி.1930ல் ராஜாஜியின் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். உப்பின் மீது படுத்து கிடந்து அறப்போர் நிகழ்த்தியவரை ஆங்கில அரசு மிகுந்த பாடுபட்டு தடியடி நடத்தி அகற்றி கைது செய்து சிறையில் அடைத்தது. உப்பு சத்தியாகிரகத்தில் சிறைக்கு சென்ற முதல் பெண்ணாக பதிய பெற்றார். கி.பி.1931ல் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க தேச சேவைக்காக சிறுவர்களின் "வானரப்படை"யை சென்னை திருவல்லிக்கேணியில் ஆரம்பித்தார். அந்நிய துணி எரிப்பில் கலந்து கொண்டு சிறை தண்டனை பெற்றார். கி.பி.1933ல் காந்தியடிகள் சென்னை வந்தபோது அரிஜன சேவா நிதிக்காக அவரிடம் தனது நகைகளை ஒப்படைத்தார். கி.பி.1934ல் சென்னை மகா சபைக்கு துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி இவர் தான். கி.பி.1936ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் கி.பி.1937ல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் நேரம் தவறியே பணிக்கு வந்ததை அறிந்து ஒருநாள் இவரே தூய்மை பணியை ஆரம்பிக்க அவர்கள் இவரிடம் மன்னிப்பு கேட்டு அதுமுதல் நேரம் தவறாமல் பணிக்கு வந்தனர். கி.பி.1938ல் ஜப்பானுக்கு சென்ற அமைதி குழுவிலும் இடம்பெற்றார். கி.பி.1940ல் நடந்த தனிநபர் சத்தியம் கிரகத்தில் கலந்து கொண்டு ஒரு வருட சிறைதண்டனை பெற்றார். கி.பி.1946ல் சென்னை ராஜதானிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சுகாதார துறை அமைச்சராக பணியாற்றினார். அப்போது பதவி ஏற்பு நிகழ்வின் போது ராகு காலம் சமயத்தில் பதவி ஏற்பது பற்றி பேச்சு வர ராகு காலமாவது கேது காலமாவது அதை விட ஒரு பெரிய சனியன் அல்லவா நாட்டை பிடித்துள்ளது என்ற கூற அவையே அதிர்ந்தது. அரசின் உயர் பதவிகளில் வெள்ளையரை அமர்த்துவது என்பது தான் அப்போதைய வழக்கம். இந்தியர்களை தான் நிரப்ப வேண்டும் என்று கூறி சர்ஜன் ஜெனரலாக இருந்த ஆங்கிலேயரின் இடத்தில் இந்தியரான கர்னல் சங்கம்லால் என்பவரை நியமித்தார். அத்தோடு நில்லாமல் சென்னையின் சர்ஜன் ஜெனரலாக டாக்டர் பி.வி. செரியனையும் பொது சுகாதாரத்துறை இயக்குனராக டாக்டர்.மேத்யூ என்பவரையும் நியமித்தார். இதன் பின்னரே காங்கிரஸின் தலையாய கோரிக்கையாகவும் இந்தியர் நியமனம் மாறியது. முதன்முதல் கொசு ஒழிப்பிற்காக "மலேரியா இயக்கம்" ஆரம்பித்தது நாட்டிலையே முதன் முறையாக இவரின் காலத்தில் தான் நடந்தது. பலத்த எதிர்ப்புக்கு இடையே ஆயுர்வேத கல்லூரியையும் இவர் ஆரம்பித்து வைத்தார். இவர் கி.பி.1951 ஆகஸ்ட் 6ம் தேதி தனது 58வது வயதில் நீரழிவு நோயினால் அவதிப்பட்ட இவர் மாரடைப்பினால் காலமானார்.
இவரது நூற்றாண்டு விழாவின் போது இவரது நினைவை போற்றும் விதமாக அப்போதைய முதல்வர் கருணாநிதி சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையை "ருக்மணி லட்சுமிபதி சாலை" என்று பெயர் மாற்றம் செய்தார். கி.பி.1996ல் முதல்வர் கருணாநிதி இவரது மார்பளவு உருவ சிலையை திறந்து வைத்தார். முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசு கி.பி.1997ல் இவருக்கு சிறப்பு தபால்தலை வெளியிட்டு சிறப்பித்தது. குண்டூர் மருத்துவ கல்லூரியில் இவருக்கு மார்பளவு உருவ சிலையும் உருவப்படமும் வைக்கப்பட்டதுடன் அங்குள்ள ஒரு கட்டிடத்திற்கு "ஆச்சண்டா ருக்மணி லட்சுமி காரு" என்று இவரது பெயரும் வைக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment