148) உமாபாய் குந்தாப்பூர்

உமாபாய் குந்தாப்பூர் (கி.பி.1892-1992) :

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றவர் இவர். காந்தியடிகளின் அறவழியை பின்பற்றியவர். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உணவும் பணமும் தங்க இடமும் அளித்தவர். இவர் உப்பு சத்தியாகிரகத்தில் சிறைப்பட்ட சமயத்தில் இவரது மாமியார் இறந்த நிகழ்வும் 1 வாரம் கழித்தே தெரிந்தது. காந்தியின் போராட்டங்களை செயல்படுத்தியவர்.

இவர் கி.பி.1892 மார்ச் 25ல் மங்களூரில் கிருஷ்ணராவ் கோலிகேரி மற்றும் ஜம்னாபாய் தம்பதிகளுக்கு மகளாக பவானி கோலிகேரி என்ற இயற்பெயருடன் பிறந்தார். இவருக்கு மொத்தம் 4 சகோதரர்கள் உண்டு. இவர்கள் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. இவருக்கு 13 வயதில் சஞ்சீவ் ராவ் குந்தாப்பூர் என்பவருடன் திருமணம் நடந்தது. இவரது மாமனாரான ஆனந்த் ராவ் குந்தாப்பூர் சமூக சீர்திருத்தவாதி. பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராக இருந்ததால் மாமனாரின் ஆதரவினால் பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் தனது மாமனாருடன் சேர்ந்து மும்பை கவுன் தேவி மகிளா சமாஜ் மூலம் பெண்களுக்கு கல்வி கற்பித்தார். இவரது 31வது வயதில் இவரது கணவர் காச நோயினால் காலமானார். அதன் பின்னர் இவரது மாமனார் இவரை ஹூப்ளிக்கு அழைத்து வந்தார். அங்கே வந்து கர்நாடக பத்திரிக்கை ஒன்றை ஆரம்பித்தார். மேலும் "திலக் கன்யா ஷாலா" என்ற பள்ளியை ஆரம்பித்து உமாபாயை அதன் பொறுப்பேற்க வைத்தார்.

கி.பி.1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலையும் அதன் பிறகான மக்களின் எழுச்சியும் மற்றும் கி.பி.1920ல் பாலகங்காதர திலகரின் இறுதி ஊர்வலத்தில் 50 லட்சம் மக்கள் திரண்டதும் இவருக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக காங்கிரஸ் அமைப்பின் தன்னார்வலராக சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார். காந்தியின் காதி துணியை உடுத்தி அதன் ஆதரவு பிரச்சாரங்களில் பங்கு கொண்டார். ஆங்கிலேயரை எதிர்ப்பதின் முதல் படி என்பது அவர்களின் பொருட்களை பகிஷ்கரிப்பது என்பதை உணர்ந்து காதி துணிகளை அணிய பிரச்சாரம் செய்தார். சுதேசி பத்திரிக்கையில் நாடகம் எழுதியதுடன் அதை நடிக்கவும் செய்தார். வீடு வீடாக சென்று பெண்களை தேச சேவைக்கு வரும்படி அழைத்தார். கி.பி.1921ல் என்.எஸ்.ஹர்திகர் ஆரம்பித்த "ஹிந்துஸ்தான் சேவா தள்" இவருடைய முயற்சியால் ஹூப்ளி முழுவதும் இளைஞர்களை தன் வசம் ஈர்த்தது. எண்ணற்ற இளம்பெண்கள் இவரை பின்பற்றி தேச சேவைக்கு தன்னார்வலராக சேவை செய்ய முன் வந்தனர். கி.பி.1924ல் பெல்காம் காங்கிரஸ் மாநாட்டில் 150 பெண்களை தன்னார்வலராக இணைத்தார். கி.பி.1932ல் இவர் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் பூனேவிலுள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நேரத்தில் இவரது மாமியார் மறைந்தார். அவர் மறைந்த செய்தியே இவருக்கு 1 வாரம் கழித்து தான் தெரிந்தது. இவர் சிறையில் இருக்கும்போது இவரது கர்நாடக பத்திரிகை, இவரின் பள்ளி மற்றும் இவரின் அமைப்பான "பாஹினி மண்டல்" ஆகியவற்றையும் ஆங்கில அரசு தடை செய்தது. இதனால் இவர் இன்னும் முன்னிலும் வேகமாக சுதந்திர களத்தில் இறங்கினார். சிறையில் இருக்கும்போது இவரின் துன்பங்களை கண்ட உடன் இருந்த சரோஜினி நாயுடு இவரை பின்னால் இருந்து செயல்படுமாறு அறிவுறுத்தினார். அதன்படியே சுதந்திர போராட்ட பெண்களுக்கு இவரது வீடே தங்கும் இடமாக மாறியது. அது மட்டுமல்லாது அவர்களது போக்குவரத்து செலவுகளுக்கும் இவர் நிதியுதவி அளித்தார். கி.பி.1934ல் பீகார் பூகம்பத்தின் போது இவரின் சேவைகளும் துணிச்சலான செயல்களும் பாபு இராஜேந்திர பிரசாத் மற்றும் ஆச்சார்ய கிருபாளினி ஆகியோரை ஈர்த்தது. கி.பி.1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்ட போது தலைமறைவு வாழ்க்கை நடத்த வேண்டிய நிலைக்கு வந்தபோது அவர்களுக்கு வெளியே தெரியாமல் நிதியுதவி அளித்தார். கி.பி.1946ல் மகாத்மா காந்தி கஸ்தூர்பா டிரஸ்ட்டின் கர்நாடகா பொறுப்பாளராக இவரை நியமித்தார். இவர் மற்ற தன்னார்வலர்களுடன் இணைந்து நன்கொடை வேண்டி பணம் பெற்று கிராம சேவாக்களை நடத்தினார். இதன் மூலம் குழந்தைகள் நலம், கல்வி, மற்றும் சுகாதார சேவைகளை செய்வதன் மூலம் கிராமங்களை முன்னேற்ற முடியும் என்று அதன்படி நடந்தார். சுதந்திரத்திற்கு பிறகு விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்ட தம்ரா-பத்ரா விருதையும் ஓய்வூதியங்களையும் மறுத்தார். முண்ணனி அரசியலுக்கு வந்து பதவிகளை பெறவும் விரும்பவில்லை. எந்த காரியத்திற்கு போராடினோமே அது நடந்து விட்டது என்று அமைதியாக தனது மரியாதைக்குரிய மாமனாரின் நினைவாக கட்டிய சிறு நினைவு இல்லமான "ஆனந்த ஸ்மிரிதி"யில் தனது காலத்தை கழித்து வந்தார்.‌இவர் தனது 100வது வயதில் ஹூப்ளியில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்