149) அன்னை தெரசா
அன்னை தெரசா (கி.பி.1910-1997) :
இந்திய வரலாற்றில் தன்னலமற்ற சேவைகளுக்காக பாராட்டப்பட்ட பெண் ஆளுமைகளில் இவர் முதன்மையானவர். அயல்நாட்டு பெண்ணாக இருந்தாலும் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்தியாவிலையே கழித்தவர். இந்திய ஏழை மக்களின் சேவைகளுக்காகவும் ஆதரவற்றோர் கொடும் நோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட நோயாளிகளுக்காவும் தனி இல்லம் அமைத்து அவர்களின் பராமரிப்பை மேற்கொண்டவர். எண்ணற்ற நாடுகள் இவருக்கு தங்கள் குடியுரிமையை அளித்தாலும் இந்தியாவையே தன் வீடாக நினைத்தவர். இறந்த பின்னர் கத்தோலிக்க சபையினரால் "புனிதர்" பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர்.
இவர் கி.பி.1910 அல்பேனியாவில் ஸ்கோப்ஜி நகரில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அஞ்சேஸே (ஆக்னஸ்) கோன்ஜா போஜாஜியூ என்பதாகும். இவரது தந்தை நிக்கல் நிகோலா மற்றும் தாய் போஜாஜியூ திரானி பெர்னாயின் ஆகியோருக்கு 3வது மகளாக பிறந்தார். இவரது மூத்த சகோதரி பெயர் அகா மற்றும் மூத்த சகோதரர் பெயர் லாகஸ் என்பதாகும். தற்போது இவர் பிறந்த நகரம் வடக்கு மாசிடோனியாவின் தலைநகராக உள்ளது. இவரது தந்தை இவரது 8 வயதில் நோய்வாய்ப்பட்டு மறைந்தார். அதனால் தாயின் வளர்ப்பினால் நற்குணங்கள் போதிக்கப்பட்டு வளர்ந்தார். 5வயதிலையே பள்ளி பாடங்களை எப்போது கேட்டாலும் உடனே சொல்லுமளவுக்கு படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவருடைய நகைச்சுவை உணர்வினாலும் புன்சிரிப்பினாலும் எல்லோரின் கவனத்தையும் பெற்றார். இளம் வயதிலையே மிஷினரிகளின் வாழ்க்கை முறைகளிலும் அவர்கள் வங்காளத்தில் ஆற்றிய சேவைகளாலும் ஈர்க்கப்பட்டார். 12 வயதில் தனது வாழ்வை மத வாழ்க்கைக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார். அதன்படி சமூக சேவைகளில் ஈடுபட ஆரம்பித்தார். சிறு வயதிலையே ஏழை எளியவர்களுக்கு, உடல் ஊனமுற்றோருக்கு உதவுதல், தேவாலயங்களை சுத்தம் செய்தல் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆறுதலாக பேசியும், அவர்களின் நோய்க்கு மருந்திடுதல் ஆகிய பணிகளையும் செய்து வந்தார். இவர் தனது 18வது வயதில் கி.பி.1928ல் கன்னியாஸ்திரி ஆகவேண்டுமென்று தனது தாய் மற்றும் சகோதர,சகோதரிகளிடம் அனுமதி பெற்று "Sodality of Children Mary" என்ற அமைப்பில் தன்னை மறை பணியாளராக லொரோட்டோ சகோதரிகளிடம் சென்று சேர்ந்து கொண்டார். வங்காளம் சென்று திரும்பிய இவர்களின் அனுபவத்தை கேட்ட இவர் இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் பால் இரக்கம் கொண்டு துறவறம் இருக்க முடிவு செய்தார். பின்னர் அயர்லாந்து சென்று "சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ" என்ற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்து ஆங்கிலம் கற்றுகொண்டார். பின்னர் கி.பி.1929ல் முதல்முறையாக இந்தியாவிலுள்ள மேற்கு வங்காளத்திலுள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தார். திருச்சபையின் சட்ட விதிகளின்படி பெயரை மாற்றுமாறு கூறவே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 24 வயதில் மறைந்த கன்னியாஸ்திரி "தெரசா மார்டின்" நினைவாக தனது பெயரை "தெரசா" என்று மாற்றிக்கொண்டார்.
கொல்கத்தாவில் ஏழை மக்கள், ஏழை தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை பார்த்து அவர்கள் மீது இரக்கம் கொண்டார். இந்த சூழலில் டார்ஜிலிங்க்கில் உள்ள லொரோட்டா இல்ல பள்ளியில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டார். குழந்தைகளிடம் அன்பு காண்பித்தார். சில காலங்களிலையே "இனி இந்தியா தான் தனது தாய் நாடு" என்று முடிவெடுத்தார். இந்தி மொழியையும் கற்றுக்கொண்டார். பின்னர் கொல்கத்தாவிற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தது மட்டுமின்றி குழந்தைகளை குளிப்பாட்டி சாப்பாடும் ஊட்டினார். ஏழை மக்களை தேடி சென்று அவர்களுக்கு உதவிகள் புரிந்தார். பின்னர் அவர் அந்த பள்ளிக்கு முதல்வரானார். 17 ஆண்டுகாலம் பள்ளியில் கல்வி அனுபவங்களை கற்றுக்கொண்டார். கி.பி.1942-43ல் உலகப்போர் உச்சத்தில் இருந்த சமயம் விடுதலை இந்திய சுதந்திர போராட்டங்களும் தீவிரமாக நடந்தபோது இந்தியா முழுவதும் பஞ்சத்தினால் மக்கள் வாடி வதங்கியபோது அவர்களுக்கு அதிக உதவிகள் செய்ய நினைத்தது லோரேட்டாவின் விதிமுறைக்கு முரணாக இருந்ததால் கல்வி பணியில் இருந்து விலக முடிவு செய்தார். ஆனாலும் இவரது விலகல் கடிதம் கி.பி.1948 ஏப்ரல் மாதம் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுமுதல் தனது சேவையை முழுநேரமும் செய்ய ஆரம்பித்தார். அந்த நேரத்தில் அவரது கையில் 5 ரூபாய் பணமும் மூன்று நீலநிற சேலைகளும் மட்டுமே இருந்தது.குடிசையில் வசித்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவரால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். அடித்தட்டு மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்க பாட்னாவில் உள்ள செயிண்ட் ஃபேமிலி மருத்துவமனைக்கு சென்று தனது செவிலியர் பணியை கற்று பயிற்சிகள் எடுத்துக்கொண்டு பலவிதமான நோய்களுக்கு சிகிச்சையளிக்க கற்றுக்கொண்டார்.
லொரேட்டாவின் முன்னாள் மாணவிகள் 10 பேருடன் இணைந்து கி.பி.1949ல் கல்கத்தாவிலுள்ள மோத்திஜில் என்ற குடிசை பகுதிக்கு உதவ செல்லும்போது அங்கு முதலில் தேவைப்படுவது குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் என்பதை உணர்ந்து 5 மாணவர்களுடன் அங்கே பள்ளிகூடம் அமைத்தார். கொஞ்ச நாட்களிலையே மாணவர்களின் எண்ணிக்கை பெருகியது. நோயுற்று மரணமடைந்த பெண் நோயாளியை கண்டு துயருற்று மருத்துவமனைகளில் உபரி மருந்து பொருட்களை வாங்கி வந்து சிறு அளவில் மருத்துவமனை அமைத்தார். கி.பி.1950ல் "பிறர் அன்பின் பணியாளர்" சபையை தோற்றுவித்து பசியால் வாடும் ஏழைகளுக்கும், மாற்றுதிறனாளிகளுக்கும் நோயுற்றவர்களுக்கும் உதவிகள் செய்து வந்தார். ஆதரவற்ற மக்களுக்கு கருணை இல்லம் அமைக்க அரசின் உதவியை கேட்டு வாங்கினார். வழிபாடின்றி விடப்பட்ட ஒரு காளி கோயிலை இவருக்கு ஒதுக்க அதில் "நிர்மல் ஹிருதய்" என்னும் முதியோர் கருணை இல்லம் அமைத்தார். இதுவே பின்னாளில் காளிகட் இல்லம் என்று அழைக்கப்பட்டது. அந்த ஆண்டு "மிஷினரீஸ் ஆஃப் சாரிட்டி" என்ற சேவை அறக்கட்டளை அமைப்பை தோற்றுவித்து நோயுற்ற மக்களுக்கு உதவிகள் செய்து வந்தார். கி.பி.1955ல் ஊனமுற்ற மனவளர்ச்சி குன்றிய குப்பையில் வீசப்பட்ட குழந்தைகளுக்காக "சிசுபவன்" என்ற இல்லத்தை ஆரம்பித்தார். அதே வருடத்தில் தொழு நோயாளிகளுக்காக "காந்தி பிரேம் நிவாஸ்" என்ற நிரந்தர மருத்துவமனையை ஆரம்பித்தார். பல நகரங்களுக்கு பயணம் செய்து தொழு நோயாளிகளையும் எச்.ஜ.வி பாதித்த நோயாளிகளையும் புறக்கணிக்கக் கூடாது என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினார். இவரின் மருத்துவமனை வெறும் ஆறுதலாக வலி நிவாரணி மருந்துகள் மட்டுமே தருகிறதே தவிர மருத்துவம் தரவில்லை என்ற குற்றச்சாட்டையும் மதமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டுகளை சந்தித்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் தனது பணிகளை தொடர்ந்தார். நன்கொடையாக பெறப்பட்ட நிதிகளை மதமாற்றம் செய்ய பயன்படுத்துவதாகவும் ஊழலில் சிக்கி தண்டனை பெற்றவரிடம் நன்கொடை பெற்றதால் அவரை புகழ்ந்து உரைத்த சம்பவங்களிலும் இவரின் பேரில் சர்ச்சைகள் தொடர்ந்தது. கல்கத்தா நகரம் தொழுநோயாளிகளின் நகரம் என்ற இழிவான கருத்தை உண்டாக்கியதாகவும் கல்கத்தாவின் பெருமை பெயர் போனதாகவும் இவரின் மேல் சர்ச்சைகள் எழுந்தது. சாகும் நிலையில் உள்ள நோயாளிகளை இரகசியமாக மதமாற்றம் செய்து வைத்ததாகவும் இவரின் மேல் குற்றம் சாடட்ப்பட்டது. உறவினர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளையும் தனது கைகளால் மருந்துகள் அளித்து பராமரித்தார். இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தனது சேவைகளை தொடர்ந்தார். கி.பி.1965ம் வெனிசூலாவிலும் பிற உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் தனது சேவைகளை தொடர்ந்து செய்து வந்தார். பின்னர் கி.பி.1968ல் ரோம், தான்சானியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் நாடுகளிலும் கிளைகளை துவக்கினர். கி.பி.1969ல் இவரை பற்றிய ஆவணப்படம் வெளிவந்த பிறகு உலகம் முழுவதும் பிரபலமானார். பல நாடுகள் இவருக்கு தங்கள் நாட்டு குடிமகன் உரிமையை வழங்க முன்வந்தாலும் அதை மறுத்து இந்திய நாட்டின் குடிமகன் உரிமையை மட்டும் தொடர்ந்து வந்தார். ஒருமுறை காலையில் கடை கடையாக நிதியுதவி கேட்க போகும்போது ஒரு கடைக்காரர் இவரின் கையேந்திய கைகளில் பீடா மென்று துப்பிவிட்டார். அதை துடைத்து விட்டு "எனக்கு இதை நீங்கள் கொடுத்து விட்டீர்கள். பசியால் வாடும் குழந்தைகளுக்கு கொடுங்கள்" என்று மீண்டும் கையேந்திய போது அந்த கடைக்காரர் உண்மையில் கூனிக்குறுகி போய் இவரிடம் மன்னிப்பு கேட்டு நிதியை அளித்தார். அந்த அளவுக்கு அஹிம்சையும் சேவையில் தளராத உள்ளமும் கொண்டவர். இவரது கருக்கலைப்பு மற்றும் விவாகரத்து பற்றிய கருத்துகள் பயங்கர விமர்சனத்திற்கு உள்ளாயின. கி.பி.1982ல் இஸ்ரேஸ்-பாலஸ்தீன படைகளுக்கு இடையே நடந்த போரில் அமைதி தூதுவராக பணியாற்றி தற்காலிக போர் நிறுத்தம் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு செஞ்சிலுவை சங்கத்தின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். எத்தியோப்பியா பஞ்சம் மற்றும் இரஷ்யாவின் செர்னோபில் அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டோருக்கும் ஆர்மீனியா பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கும் உதவிபணிகள் செய்தார். கி.பி.1991ல் தனது சொந்த நாடான அல்பேனியாவுக்கு சென்று அங்கேயும் தனது சபையின் கிளையை ஆரம்பித்தார். 100 நாடுகளில் 517 தொண்டு நிறுவனங்களை நடத்தி வந்தார்.
கி.பி.1962ல் இந்திய அரசால் பத்மஶ்ரீ விருதும், கி.பி.1972 ஜவஹர்லால் நேரு விருதும், கி.பி.1980ல் பாரத் ரத்னா விருதும் பெற்றார். கி.பி.1962ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் ரமன் மக்சேசே விருதையும், கி.பி.1982ல் ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருதையும், கி.பி.1982ல் இங்கிலாந்தின் ஆர்டர் ஆஃப் மெரிட் விருதையும் பெற்றார். கி.பி.1979ல் அமைதிக்கான நோபெல் பரிசையும் பெற்றார். கி.பி.1991ல் அவர் பிறந்த அல்பேனியா நாடு அவருக்கு குடியுரிமையும் கி.பி.1994ல் தேசத்தின் தங்க மரியாதையையும் அளித்தது. கி.பி.1996ல் அமெரிக்காவின் கெளரவ குடியுரிமை அளித்து பெருமைப்படுத்தியது. இது தவிர எண்ணற்ற பல்கலைக்கழகங்கள் இவருக்கு கெளரவ பட்டங்களை அளித்து கெளரவப்படுத்தியது.
கி.பி.1983ல் போப்பை ரோமில் சந்தித்த போது முதல்முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. கி.பி.1989ல் இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டபோது செயற்கை இதயமுடுக்கி பொருத்தப்பட்டது. கி.பி.1991ல் மெக்சிகோவில் இருந்த போது நிமோனியா பாதிப்பிற்கு பின்னர் இதய கோளாறுகள் தொடர்ந்ததால் "பிறர் அன்பின் சபை" தலைமை பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால் ரகசிய வாக்கெடுப்பினால் அச்சபையின் சகோதரிகளின் வேண்டுதலால் அப்பணியில் தொடர வேண்டியதாகிட்டது. கி.பி.1996ல் கீழே விழுந்து கால் எலும்பு முறிந்தது.அதே வருடத்தில் மலேரியா மற்றும் இதய நோயினால் அவதிபட்டவர் கி.பி.1997 மார்ச்சில் சபையின் பொறுப்புகளில் இருந்து விலகினார். இவர் சகோதரி நிர்மலாவை தனக்கு பின்னர் சபையை நடத்துபவராக அடையாளம் காட்டினார். கி.பி.1997 செப்டம்பர் 5ல் கல்கத்தாவில் இவர் மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு பின்னர் பெண் ஒருவரின் கனவில் வந்து சிகிச்சை செய்ததால் அவரின் நோய் குணமானதாக கூறி அருளாளர் பட்டம் அளிக்க ஆதரவு தேடினர். ஆனாலும் அந்த பெண்ணின் கணவர் மற்றும் மருத்துவர்கள் பராம்பரிய மருத்துவ சிக்ச்சையினால் மட்டுமே குணமானதாக கூறியதும் சர்ச்சையை உண்டாக்கியது. இவரது மரணத்திற்கு பின்னர் கி.பி.2003 அக்டோபர் 19ல் இவருக்கு போப் இரண்டாம் அருள் சின்னப்பரால் "அருளாளர்" பட்டம் வழங்கப்பட்டது. கி.பி.2016 செப்டம்பர் 4ல் போப் பிரான்சிஸால் இவருக்கு "புனிதர்" பட்டம் வழங்கப்பட்டது. சர்ச்சைகளை கடந்து தனது சேவைகளில் மட்டுமே கவனமாக இருந்த அன்னைக்கு அவரின் மரணத்திற்கு பின்னரும் சர்ச்சைகள் ஓயவில்லை.



Comments
Post a Comment